கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் போதை மறுவாழ்வு மற்றும் மீட்பு மையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக அரசின் போதைப் பழக்க ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் இந்த மையத்தில், போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை, உளவியல் ஆலோசனை, மறுவாழ்வு சேவைகள் மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து அமைச்சர் விரிவாக ஆய்வு செய்தார்.
மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளை பார்வையிட்ட அமைச்சர், நோயாளிகளுக்கான படுக்கை வசதி, சிகிச்சை முறைகள், மருத்துவ உபகரணங்கள், ஆலோசனை அறைகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், போதைப் பழக்கத்திலிருந்து மீண்டு வரும் நோயாளிகளிடம் நேரடியாக உரையாடி, அவர்களின் சிகிச்சை அனுபவங்கள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், போதைப் பழக்கத்திற்கு ஆளாகும் இளைஞர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், சிகிச்சைக்காக வரும் ஒவ்வொரு நோயாளிக்கும் தரமான மருத்துவ சேவையுடன் மனநல ஆலோசனையும், சமூகத்தில் மீண்டும் இயல்பான வாழ்க்கையை தொடங்க தேவையான மறுவாழ்வு வழிகாட்டுதல்களும் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும், போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவித தயக்கமும் இன்றி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முன்வர வேண்டும் என்றும், அவர்களுக்கு தேவையான அனைத்து மருத்துவ மற்றும் மறுவாழ்வு சேவைகளையும் தமிழக அரசு தொடர்ந்து வழங்கி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது கோவை மாவட்ட நிர்வாக அதிகாரிகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் மதுவிலக்கு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.