நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மறைந்த பத்மஸ்ரீ விருது பெற்ற நானம்மாள் நினைவாக நானா யோகா ஸ்டுடியோ சார்பில் “திரங்கா வந்தனம்” என்ற தலைப்பில் சிறப்பு யோகா உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் பங்கேற்று ஒரே இடத்தில் யோகாசன நிலையில் அமர்ந்து 24 நிமிடங்கள் தேசியக் கொடி வடிவில் அணிவகுத்து நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர்.
அஞ்சலி முத்திரை, வஜ்ராசனம் மற்றும் சுகாசனம் உள்ளிட்ட யோக நிலைகளில் பங்கேற்பாளர்கள் அமர்ந்து தேசியக் கொடி வடிவத்தை உருவாக்கினர். மேலும், தேசியக் கொடியில் இடம்பெற்றுள்ள அசோக சக்கரத்தின் 24 ஆரங்களை குறிக்கும் வகையில் 24 நிமிடங்கள் இந்த நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பங்கேற்பாளர்கள் அனைவரும் வெள்ளை நிற உடை மற்றும் தொப்பி அணிந்து, மூவர்ணக் கொடியை பிரதிபலிக்கும் வகையில் ஒருங்கிணைந்து யோகா செய்தனர்.
யோகாவின் மூலம் ஒழுக்கம், உடல் நலம் மற்றும் நாட்டுப்பற்று ஆகியவற்றை ஒருங்கிணைத்து வெளிப்படுத்திய இந்நிகழ்வு செவன்த் செனஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
பத்மஸ்ரீ வி. நானம்மாள் அவர்களின் யோகா பாரம்பரியத்தை முன்னெடுத்து வரும் நானா யோகா ஸ்டுடியோ சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வு, சுதந்திர தின கொண்டாட்டத்தில் வித்தியாசமான முயற்சியாக அமைந்தது.
நிகழ்வின் நிறைவில் பங்கேற்றவர்களுக்கு செவன்த் சென்ஸ் உலக சோதனை புத்தகம் சார்பாக உலக சாதனைக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.