திருவொற்றியூர்: எண்ணூர் முகத்துவாரம் அருகே கொசஸ்தலை ஆற்றில் பல்வேறு வகையான மீன்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் டன் கணக்கில் செத்து மிதந்த சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எண்ணூரில் கொசஸ்தலை ஆறும், பக்கிங்காம் கால்வாயும் சந்தித்து கடலில் கலக்கும் பகுதியில் முகத்துவாரம் அமைந்துள்ளது. கடல் நீர் ஆற்றுப் பகுதிக்குள் வந்து செல்வதற்கும், ஆற்று நீர் கடலுக்குள் செல்வதற்கும் முக்கியமான நீர்வழியாக இந்தப் பகுதி விளங்கி வருகிறது.
முகத்துவாரம் மற்றும் கொசஸ்தலை ஆற்றின் நீர்வழிப் பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் பக்கிங்காம் கால்வாய் வழியாக ஆற்றின் முகத்துவாரப் பகுதியில் கலப்பதாக அப்பகுதி மீனவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், வடசென்னை அனல் மின் நிலையப் பகுதியில் இருந்து வெளியேறும் அதிக வெப்பநிலை கொண்ட நீரும் இப்பகுதியில் கலப்பதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த சில ஆண்டுகளாக மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டு வருவதாக மீனவர்கள் தெரிவித்து வந்த நிலையில், நேற்று இரவு முதல் முகத்துவாரப் பகுதியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கத் தொடங்கின.
மடவை, கிழங்கான், ஊடான், கார்வா, கௌத்தி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களுடன் இறால், நண்டு உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களும் அதிக அளவில் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. இதற்கு ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலந்ததே காரணமாக இருக்கலாம் என மீனவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
கொசஸ்தலை ஆற்றை நம்பி தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், முகத்துவாரக்குப்பம், எண்ணூர்குப்பம், காட்டுக்குப்பம், சிவன்படை வீதிக்குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மீன்கள் இறந்ததற்கான காரணத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் இன்று காலை ஒன்றிணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பந்தப்பட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, ஆற்றில் கழிவுகள் கலப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீன்கள் இறந்ததற்கான உண்மையான காரணத்தை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தெரிவிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், பொதுமக்கள் மற்றும் மீனவ கிராம நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
மீன்கள் பெருமளவில் இறந்ததற்கான காரணத்தை அறிவியல் ரீதியாக கண்டறிந்து, சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மீனவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.