செங்குன்றம் செய்தியாளர்
புழல் அடுத்த இலட்சுமிபுரத்தில் அருள்மிகு ஸ்ரீ கிராமதேவி செல்லியம்மன் திருக்கோயிலின் புனராவர்த்தண ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்ந நிகழ்வில், மஹாகணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் யாகசாலை வேள்விகள் விக்னேஷ்வர சிவாச்சாரியார்களால் நடத்தப்பட்டு, தொடர்ந்து அஷ்டபந்தனம் சாற்றுதல், விசேஷ திரவிய ஹோமங்கள், ஸ்வாஸினி பூஜை, கன்யா பூஜை, தம்பதி பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
யாகசாலை பூஜைகள் மற்றும் பூர்ணாஹுதி நிறைவடைந்ததை தொடர்ந்து, யாக சாலையில் இருந்து பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித கடங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, ஸ்ரீ கிராமதேவி செல்லியம்மன், துர்கை, லட்சுமி, சரஸ்வதி, சப்தமாதாக்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் அம்மனுக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் மற்றும் சோடச தீபாராதனை நடைபெற்ற இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு சமபந்தி அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வசந்த் ராஜா தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.