செங்கல்பட்டு, ஜூன் 30:
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) வேட்பாளர் தொடர்பாக, கட்சித் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பே மாவட்டச் செயலாளர் பெயரை அறிவித்ததாக கூறப்படும் விவகாரம் கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அதன் பின்னர் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் தலைவர் விஜயின் பிறந்தநாள் விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், செங்கல்பட்டு தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.எஸ். பாலாஜி, கட்சியின் நலத்திட்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக மரகதம் குமரவேல் போட்டியிடுவார் எனக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சித் தலைவர் மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிகாரப்பூர்வமாக வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பே இவ்வாறு அறிவித்தது கட்சியின் நடைமுறைக்கு முரணானது என சில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், விஜய் மக்கள் இயக்கம் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆரம்பகால நிர்வாகிகள், தொண்டர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், பிற கட்சிகளில் இருந்து இணைந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் கட்சிக்குள் அதிருப்தி நிலவி வருவதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து கட்சித் தலைமை கவனம் செலுத்தி, மாவட்டச் செயலாளர் எம்.எஸ். பாலாஜியின் செயல்பாடு தொடர்பாக விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழக வெற்றிக் கழக தலைமை இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதையும் வெளியிடவில்லை.