மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முன் நேற்று 14-வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிக்கான வெற்றிக் கோப்பை சுற்றுப் பயணத்தை அமைச்சர் பி.மூர்த்தி துவக்கி வைத்தார்.
சென்னை,மதுரையில் நவ.28 முதல் டிச.10 வரை 14-வது ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி நடை பெறுகிறது. அதனையொட்டி அப்போட்டிக்கான வெற்றிக் கோப்பை சுற்றுப்பயணம் தமிழகம் முழுவதும் நடை பெறுகிறது. சிவகங்கை மாவட்டத்திலிருந்து நேற்று முன்தினம் மாலையில் உலகக் கோப்பை வாகனத்துக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்த கோப்பையை பொதுமக்கள் பார்க்கும் வகையில் சுற்றுப்பயணத்தொடக்க விழா மீனாட்சி அம்மன் கோயில் முன் மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் தலைமையில் நடை பெற்றது.
இதில் அமைச்சர் பி.மூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சுற்றுப்பயணத்தை தொடங்கி வைத்தார். அப்போது கோப்பையையும், காங்கேயன் சின்னத்தையும் பொதுமக்கள் பார்க்கும் வகையில் காண்பித்தார்.
அறங்காவலர் குழுத் தலை வர் ருக்மணி பழனிவேல்ராஜன், மாநகர் காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், மாநகராட்சி ஆணையர் சித்ரா, மாவட்ட எஸ்.பி அரவிந்த், எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, மு.பூமி நாதன், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் மீனாட்சி கோயிலில் இருந்து சாலை வழியாக எம்ஜிஆர் விளையாட்டரங்கை அடைந்தது.