கோவை / சென்னை:
இரைப்பை–குடலியல் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சையில் இந்தியாவின் முன்னணி மருத்துவமனையான ஜெம் மருத்துவமனை, சென்னை மற்றும் கோவை மையங்களை தடையின்றி இணைக்கும் இந்தியாவின் முதல் இரு-நகர ரோபோடிக் அறுவை சிகிச்சை நெட்வொர்க் திட்டமான “ஆபரேஷன் இன்ஃபினிட்டி (Operation Infinity)”-யை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
பெருநகர எல்லைகளைக் கடந்து, அதிவேக இணையம் மற்றும் இரு-முனைய இணைப்பு (Dual-Console Interconnectivity) தொழில்நுட்பம் மூலம் இரு வேறு நகரங்களில் உள்ள மருத்துவ வல்லுநர்கள் ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்து, நேரலையில் வழிகாட்டுதல்களை வழங்கி சிக்கலான அறுவை சிகிச்சைகளை தூரத்திலிருந்தே இணைந்து செய்ய இத்திட்டம் வழிவகை செய்கிறது.
இத்தொழில்நுட்பத்தில் இடம்பெற்றுள்ள அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தளம், அறுவை சிகிச்சைக்கு முந்தைய திட்டமிடல், புற்றுநோய் திசுக்களைத் துல்லியமாகக் கண்டறிதல் மற்றும் ஆபத்துகளை முன்கூட்டியே கணித்து தடுக்கும் முன்கணிப்பு பகுப்பாய்வு (Predictive analytics) ஆகியவற்றிற்குப் பெரிதும் உதவுகிறது.
இதன் மூலம் பிராந்திய மையங்களில் உள்ள நோயாளிகள் சென்னை போன்ற பெருநகரங்களுக்குப் பயணம் செய்ய வேண்டிய அவசியமின்றி, தங்களின் சொந்த ஊரிலேயே உயர்தர மருத்துவ வசதியைப் பெற முடியும். மேலும், இது அவசரகால அறுவை சிகிச்சை உதவிக்கும், இளம் மருத்துவர்களுக்கான டெலிமென்டரிங் (Telementoring) பயிற்சிக்கும் பெரிதும் பயன்படுகிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நெட்வொர்க் மூலம் சில புதிய சாதனைகளும் நிகழ்த்திக் காட்டப்பட்டுள்ளன. கோவை ஜெம் மருத்துவமனையில் கணையப் புற்றுநோய்க்கான சிக்கலான ‘ரோபோடிக் விப்பில் செயல்முறை’ (Robotic Whipple Procedure) அறுவை சிகிச்சையில், டாக்டர் சி. பழனிவேலு புற்றுநோய் பாதிப்பை அகற்றும் பகுதியையும், டாக்டர் செந்தில்நாதன் உடற்கூறு மறுசீரமைப்புப் பகுதியையும் இரு வேறு இடங்களிலிருந்து வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளனர். அதேபோல், பிறவி பித்தப்பை குறைபாட்டை நீக்கும் ‘Choledochal Cyst Excision’ அறுவை சிகிச்சையும் கோவை மற்றும் சென்னை ஜெம் மருத்துவமனைகளின் இரு வேறு குழுக்களால் ஒரே நேரத்தில் வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சி. பழனிவேலு பேசுகையில், “அதிநவீன ரோபாட்டிக்ஸ் மற்றும் AI தொழில்நுட்பம் மூலம் மருத்துவ நிபுணத்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் சுருங்காமல், புவியியல் எல்லைகளைக் கடந்து முற்றிலும் பரவலாக்கப்படும் எதிர்காலத்தை நாங்கள் உருவாக்கி வருகிறோம்” என்றார். மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் பி. பிரவீன் ராஜ் பேசுகையில், “நவீன மருத்துவத்தில் புவியியல் எல்லைகள் இனி ஒரு தடையல்ல என்பதை இது நிரூபிக்கிறது; இது நோயாளிகளின் பாதுகாப்பையும் சிகிச்சையின் துல்லியத்தையும் அதிகரிப்பதோடு, வருங்கால அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு ஒரு சிறந்த கற்றல் வாய்ப்பாகவும் அமையும்” என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.