தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420


தாராபுரம், ஜூலை 2:
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே சுமார் இரண்டு டன் ரேஷன் அரிசி கடத்தியதாகக் கூறப்படும் ஆம்னி கார் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, காயமடைந்ததாகக் கூறப்படும் இருவர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த நிலையில், போலீசார் வருவதை அறிந்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தாராபுரத்தை அடுத்துள்ள உப்பாறு அணை செல்லும் சாலையில், ரங்கபாளையம் பகுதியில் ஆம்னி மாருதி காரில் சுமார் இரண்டு டன் ரேஷன் அரிசி கடத்தி வந்ததாக போலீசார் தெரிவித்தனர். காரை ஆதில் என்பவர் ஓட்டி வந்ததாகவும், அவருடன் அவரது நண்பர் ஒருவரும் பயணித்ததாகவும் கூறப்படுகிறது.


கெத்தல் ரேவு, பனமரத்துப்பாளையம், தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்து கொண்டு சென்றபோது, எதிர்பாராத விதமாக ஆம்னி கார் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஆதிலும், அவருடன் இருந்த நண்பரும் காயமடைந்தனர்.


இதையடுத்து, இருவரும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அரிசி கடத்தல் தொடர்பாக போலீசாரிடம் சிக்கிவிடக் கூடும் என்ற அச்சத்தில், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாகக் கூறப்படும் ரவி என்பவரின் மகன் மணிகண்டன், காயமடைந்த இருவரின் பெயர்களை மாற்றிக் கூறியதுடன், அவர்கள் வாகனத்தில் இருந்து தவறி விழுந்ததாகவும் தெரிவித்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இதற்கிடையில், போலீசார் மருத்துவமனைக்கு வருவதை அறிந்த இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.சம்பவம் குறித்து தகவலறிந்த தாராபுரம் போலீசார் விபத்து நடந்த இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், விபத்துக்குள்ளான ஆம்னி காரையும், அதிலிருந்த ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்துள்ளனர். தப்பியோடிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *