கும்பகோணம், ஜூலை 3–
இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்த நீதிமன்றத் தீர்ப்பை கண்டித்தும்,அந்த இடஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க. மாவட்டத் தலைவர் ரஹ்மத் அலி தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்புக்குழு நிர்வாகிகள் பரகத்துல்லா, நூருல் அமீன், அஷ்ரப் அலி, புர்கான், ஜெகபர்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தலைமை பிரதிநிதி நூர்தீன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராஜ் முஹம்மது, ஹிபாயத்துல்லா, முகமது செல்லப்பா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
அப்போது அவர்கள் பேசுகையில், “இடஒதுக்கீடு என்பது சமூகநீதியை நிலைநாட்டும் அரசியல் சட்ட உரிமையாகும். இஸ்லாத்தை தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் அவர்களின் முன்னேற்றத்தை கடுமையாக பாதிக்கும். இந்தத் தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்து, இடஒதுக்கீட்டு உரிமையை மீண்டும் உறுதி செய்ய வேண்டும். சமூகநீதியை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
மேலும், அரசியல் சட்டம் வழங்கிய சமத்துவக் கொள்கையைப் பாதுகாக்கவும், சமூகத்தில் பின்தங்கிய மக்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், த.மு.மு.க., ம.ம.க. நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.