கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் 2026–27-ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு பி.இ. மற்றும் பி.டெக். மாணவர்களுக்கான அறிமுக நிகழ்ச்சி கல்லூரி நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஜி. திலகவதி தலைமை தாங்கினார்.
சென்னை துறைமுக ஆணையத்தின் தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரியும், பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் மாணவியுமான அனுக்ரஹா, ஐ.ஏ.எஸ்., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில், மாணவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் மன உறுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களுடன் தங்களை ஒப்பிடாமல், தனித்துவமான இலக்குகளை வகுத்து கடினமாக உழைக்க வேண்டும். மேலும், இணையப் பாதுகாப்பு, உடல் மற்றும் மனநலம், நிதி மேலாண்மை ஆகியவற்றிலும் மாணவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றார்.
முதல்வர் முனைவர் ஜி. திலகவதி பேசுகையில், பிஎஸ்ஜி அறக்கட்டளையின் 100-வது ஆண்டு மற்றும் கல்லூரியின் 75-வது பவள விழா ஆண்டில் இணைந்துள்ள புதிய மாணவர்களை வரவேற்பதாக தெரிவித்தார்.
வகுப்பறைக் கல்வியுடன் சுய கற்றல் திறனையும் வளர்த்துக் கொண்டு, கல்லூரியின் ஆராய்ச்சி மையங்கள், சிறப்பு மையங்கள் மற்றும் தொழில் நிறுவனக் கூட்டாண்மைகளை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
முன்னதாக பிஎஸ்ஜி & சன்ஸ் அறக்கட்டளையின் 100 ஆண்டுகால சமூகப் பங்களிப்பை விளக்கும் காணொளி திரையிடப்பட்டது.
துணை முதல்வர் முனைவர் ஸ்ரீதேவி, டீன் முனைவர் நடராஜன் ,மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் என நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.