திருவாரூர்: ஆக.17
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இவ்விழாவில் மொத்தம் 1,103 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இவர்களில் 616 பேர் பெண்கள். மேலும் 37 பெண்கள் உள்பட 50 மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் ஜி. பத்மநாபன், துணைவேந்தர் முதுநிலை பேராசிரியர் சுலோச்சனா சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர்களின் பெற்றோர், பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தினரும் பங்கேற்றனர்.
வந்தே மாதரம் குறித்து துணைக் குடியரசுத் தலைவர் குறுக்கீடு
பட்டமளிப்பு விழாவின் தொடக்கத்தில் பாடல்கள் மற்றும் தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு செய்தார். முதலில் வந்தே மாதரம் பாடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் குறுக்கிட்டு சில கருத்துகளைத் தெரிவித்தார்.
இதையடுத்து சிறிது நேரம் அமைதியான சூழல் நிலவியது. பின்னர் வந்தே மாதரம் இசைக்கப்பட்டு, தொடர்ந்து தேசிய கீதம் பாடப்பட்டது. அதன்பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு பட்டமளிப்பு விழா தொடங்கியது.
மாணவர்களுக்கு துணைக் குடியரசுத் தலைவர் அறிவுரை
விழாவில் மாணவர்களிடையே உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்துக்கும், பட்டம் பெறும் மாணவர்களுக்கும் முக்கியமான மைல்கல் என்றார்.
மாணவர்களின் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் மன உறுதியைக் கொண்டாடும் நாளாக இந்த விழா அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மாணவர்களின் சாதனையில் பெற்றோர், குடும்பத்தினர், ஆசிரியர்கள், வழிகாட்டிகள் மற்றும் நலம் விரும்பிகளின் பங்களிப்பும் முக்கியமானது என்றார்.
“தமிழ்நாடுதான் நான் பிறந்த மண்; எனது பயணம் தொடங்கிய மண்” எனக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டிற்கு மீண்டும் வருவது தனக்கு தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.
திருவாரூரின் சிறப்பை எடுத்துரைத்த அவர், தியாகராஜர் கோவில் அமைந்துள்ள திருவாரூர் பல நூற்றாண்டுகளாக ஆன்மிகம், கல்வி மற்றும் கலைகளின் முக்கிய மையமாக விளங்கி வருவதாகக் கூறினார். சான்றோர்கள், அறிஞர்கள் மற்றும் கர்நாடக இசையின் மும்மூர்த்திகளை உருவாக்கிய சிறப்புமிக்க மண் திருவாரூர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு மத்தியில் வாழ்நாள் கல்வி அவசியம்
உலகம் வேகமாக மாறிவரும் காலகட்டத்தில் இன்றைய பட்டதாரிகள் தங்களது பயணத்தைத் தொடங்குகின்றனர் என்று கூறிய துணைக் குடியரசுத் தலைவர், செயற்கை நுண்ணறிவு, காலநிலை மாற்றம், சுகாதாரம், உயிரித் தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருவதாகத் தெரிவித்தார்.
இத்தகைய சூழலில் அறிவு மட்டுமே போதாது என்றும், வாழ்நாள் முழுவதும் கற்றல், மாற்றங்களை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்வது, புத்தாக்கத்தை தழுவுவது மற்றும் சிக்கலான பிரச்சினைகளுக்கு கூட்டாகத் தீர்வு காண்பது ஆகியவை எதிர்கால வெற்றிக்கு அடிப்படையாக அமையும் என்றும் அவர் கூறினார்.
“நுகர்வோராக அல்ல, அறிவை உருவாக்குபவர்களாகவும்; பின்பற்றுபவர்களாக அல்ல, புத்தாக்கவாதிகளாகவும்; பின்தொடர்பவர்களாக அல்ல, தலைவர்களாகவும் மாற வேண்டும்” என மாணவர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
உயர்கல்வியில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பு
கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் உயர்கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பெண்களின் உயர்கல்விச் சேர்க்கை 2014-15ஆம் ஆண்டில் 1.57 கோடியாக இருந்த நிலையில், 2023-24ஆம் ஆண்டில் 2.24 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், இது 42.2 சதவீதம் அதிகரிப்பைக் குறிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
தாம் பங்கேற்கும் பல்வேறு பட்டமளிப்பு விழாக்களில் ஆண்களை விட அதிக எண்ணிக்கையில் பெண்கள் பட்டங்களையும் பதக்கங்களையும் பெறுவதைப் பார்ப்பது வரவேற்கத்தக்க முன்னேற்றம் என்றும் அவர் கூறினார்.
போதைப்பொருளுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவை
இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்த காவல்துறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணைக் குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார்.
போதைப்பொருள் பயன்பாடு தனிநபர்களை மட்டுமல்லாமல் குடும்பங்களையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கிறது என்றும், போதையில்லா சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தேர்வு முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை அவசியம்
பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளை தடுப்பதும், மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதும் மிகவும் முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், தேர்வு முறையின் நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய சட்டரீதியான சீர்திருத்தங்கள் அவசியம் என்றார்.
மேலும், நாட்டின் வளர்ச்சிக்கான ‘விக்சித் பாரத் 2047’ இலக்கை அடைவதில் இளைஞர்களின் ஆற்றல், கற்பனைத்திறன் மற்றும் தலைமைத்துவம் முக்கிய பங்கு வகிக்கும் என்றும், ஒவ்வொரு செயலிலும் “தேசமே முதன்மை” என்ற எண்ணத்தை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேடையில் தடுமாறி கீழே விழுந்த ஆளுநர்
பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி முடித்த குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
அவரைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும் மேடையில் இருந்து புறப்பட முயன்றார். அப்போது மேடையில் இருந்த மேடு, பள்ளத்தை கவனிக்காமல் சென்றதாக கூறப்படும் நிலையில், திடீரென தடுமாறி கீழே விழுந்தார்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் ஆளுநரை தூக்கி முதலுதவி அளித்தனர்.
இதைத்தொடர்ந்து ஆளுநர் அர்லேகர் நிகழ்ச்சி மேடையில் இருந்து புறப்பட்டு பல்கலைக்கழக விருந்தினர் இல்லத்திற்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து 2-வது ஆண்டாக மேடை அமைப்பில் சர்ச்சை
கடந்த ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலும் மேடை அமைப்பில் ஏற்பட்டதாக கூறப்பட்ட குளறுபடி காரணமாக மாணவிகள் தடுமாறிய சம்பவம் நிகழ்ந்ததாகவும், இந்த ஆண்டும் அதேபோன்று மேடை அமைப்பில் ஏற்பட்ட பிரச்சினையால் ஆளுநர் மேடையில் தடுமாறி கீழே விழுந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மேடை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
நேரடி ஒளிபரப்பு திடீர் நிறுத்தம்
ஆளுநர் மேடையில் கீழே விழுந்த சம்பவம் நடைபெற்றதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் யூடியூப் நேரடி ஒளிபரப்பு திடீரென நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பட்டமளிப்பு விழாவுக்கு செய்தியாளர்கள் செல்போன் மற்றும் கேமரா எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, யூடியூப் நேரடி ஒளிபரப்பு மூலம் செய்திகளை சேகரிக்க அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், சம்பவத்திற்குப் பிறகு நேரடி ஒளிபரப்பு இணைப்பு முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஆளுநர் தடுமாறி கீழே விழுந்த சம்பவத்தை நேரடி ஒளிபரப்பில் இருந்து மறைக்கவே ஒளிபரப்பு நிறுத்தப்பட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.