தைவானில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி இளைஞர்… ரூ.4 லட்சம் மோசடி புகார்; மகனை மீட்டுத் தர பெற்றோர் கோரிக்கை


வேலைவாய்ப்பு விசாவுக்கு பதிலாக சுற்றுலா விசாவில் அனுப்பியதாக குற்றச்சாட்டு – மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.யிடம் மனு


தூத்துக்குடி: தைவான் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததுடன், வேலைவாய்ப்பு விசாவுக்கு பதிலாக சுற்றுலா விசாவில் அனுப்பியதால் தனது மகன் தைவானில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து மகனை பாதுகாப்பாக இந்தியாவிற்கு மீட்டுத் தருமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் தேன்பொத்தை பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் அளித்துள்ள மனுவில், அவரது மகன் மணிகண்டன் (22), ஐ.டி.ஐ. படிப்பை முடித்தவர் என்றும், கோவில்பட்டி–பசுவந்தனை சாலையில் செயல்பட்டு வரும் Subi Live Tech நிறுவனம், VMS Consultancy மூலம் தைவானில் தக்காளி பேக்கிங் பணிக்கு மாதம் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை சம்பளம், இலவச தங்குமிடம் மற்றும் உணவு வசதி வழங்கப்படும் என விளம்பரம் செய்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
அந்த விளம்பரத்தை நம்பி வேலைக்காக அணுகியபோது, அங்கு பணியாற்றிய சக்தி என்ற பெண், வேலை கிடைக்க ரூ.4 லட்சம் செலுத்த வேண்டும் என கூறியதாகவும், இதையடுத்து குடும்ப நகைகளை அடமானம் வைத்து பெற்ற ரூ.4 லட்சத்தை கடந்த 08.12.2025 அன்று நிறுவனத்தின் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கணக்கில் செலுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, 14.02.2026 அன்று மணிகண்டன் தைவானுக்கு அனுப்பப்பட்டார். ஆனால், உறுதியளிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளும் ஏற்பாடு செய்யப்படாததால் அவர் கடும் சிரமத்திலும், பசியாலும் அவதிப்பட்டு வந்ததாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது.


மேலும், வேலைவாய்ப்பு விசாவிற்கு பதிலாக சுற்றுலா (Tourist Visa) விசாவில் அனுப்பப்பட்டதாகவும், தற்போது தைவானில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் எந்த காவல் நிலையத்தில் அல்லது சிறையில் உள்ளார் என்பது குறித்த தகவல் கூட குடும்பத்தினருக்கு இதுவரை தெரியவில்லை என மனுவில் கூறப்பட்டுள்ளது.


எனவே, தனது மகனை உடனடியாக பாதுகாப்பாக இந்தியாவிற்கு மீட்டுக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ரூ.4 லட்சத்தை மீட்டுத் தருவதோடு, இதேபோன்று மேலும் பல இளைஞர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனரா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முத்துராமலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.


இந்த விவகாரம் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மீது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *