சென்னை: சென்னை ஆலந்தூரை அடுத்த நங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சியாம பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் சென்னை கிழக்கு மாவட்ட கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழக பாஜக சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் குமார் தலைமை தாங்கினார். இதில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், பாரதிய ஜனதா கட்சி உருவான வரலாறு, அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை (Article 370) நீக்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை விளக்கமாக எடுத்துரைத்தார். மேலும், 1950-களில் நிலவிய இரட்டை நிர்வாக அமைப்பை ஒழிக்க வேண்டும் என்பதே சியாம பிரசாத் முகர்ஜியின் முக்கிய நோக்கமாக இருந்ததாகவும், நாட்டின் கடைசி குடிமகனுக்கும் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சென்றடைய வேண்டும் என்பதே அவரது கொள்கை என்றும் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய பிரதமர் தலைமையிலான மத்திய அரசு மக்களுக்காக செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் மற்றும் நலப்பணிகள் குறித்தும் அவர் விளக்கமாக எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.