திருச்சிராப்பள்ளி பிலாட்டலிக் கிளப் சார்பில், சர்வதேச யோகா தினம்–2026 சிறப்பு அஞ்சல் உறை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கிளப் தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை வகித்தார். கிளப் செயலரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார் வரவேற்புரை மற்றும் தொடக்க உரையாற்றினார். நிறுவனர் நாசர், பொருளாளர் தாமோதரன், அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் அன்பழகப் பாண்டியன், பிரேம்குமார், முகமது சுபேர், சிவக்குமார், விப்ரா ஸ்ரீ உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அஞ்சல் உறை குறித்து பேசிய சிவக்குமார், 2026 ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இந்திய அஞ்சல் துறையின் சென்னை அஞ்சல் மண்டலம் வெளியிட்டுள்ள சிறப்பு அஞ்சல் உறை, யோகாவின் பெருமையையும் இந்தியாவின் தொன்மையான பண்பாட்டு மரபையும் உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்த அஞ்சல் உறை வெறும் நினைவு வெளியீடாக மட்டுமல்லாமல், மனிதனின் உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முழுமையான வாழ்க்கை முறையாக யோகாவை கலைநயத்துடன் பிரதிபலிப்பதாகவும் அவர் கூறினார்.

அஞ்சல் உறையின் வடிவமைப்பு குறித்து விளக்கிய அவர், உறையின் மேற்பகுதியில் “International Yoga Day – 21 June 2026” என்ற தலைப்பு தமிழ், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இடம்பெற்றிருப்பது இந்தியாவின் மொழிப் பன்மையையும் தேசிய ஒற்றுமையையும் வெளிப்படுத்துவதாக தெரிவித்தார்.

உறையின் வலது மேற்புறத்தில் ₹500 மதிப்புடைய சர்வதேச யோகா தின அஞ்சல் தலை ஒட்டப்பட்டுள்ளதுடன், “International Yoga Day – 21 June 2026” என்ற சிறப்பு ரத்து முத்திரையும் பதிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு முத்திரை அன்றைய தினத்தில் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், உறையில் “YOGA” என்ற பெரிய எழுத்துகளுடன் பல்வேறு யோகாசனங்களைச் செய்யும் மனிதர்களின் உருவங்கள் காகித வடிவமைப்பு (Paper Engineering) முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. உறையைத் திறக்கும் போது யோகாசன உருவங்கள் முப்பரிமாண தோற்றத்தில் உயர்ந்து நிற்பது போல் காட்சியளிப்பது இந்த சிறப்பு அஞ்சல் உறையின் தனிச்சிறப்பாகும் என்றும் அவர் விளக்கினார்.

நிகழ்ச்சியில் பிலாட்டலிக் ஆர்வலர்கள் மற்றும் யோகா ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பு அஞ்சல் உறையின் வடிவமைப்பு, வரலாற்று முக்கியத்துவம் மற்றும் சேகரிப்பு மதிப்பு குறித்து ஆர்வமுடன் கலந்துரையாடினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *