புதுச்சேரி: கோடை வெயிலின் கடுமையான தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில், புதுச்சேரியில் உணவு டெலிவரி சேவையில் ஈடுபட்டு வரும் 60 மாற்றுத்திறனாளிகளுக்கு தண்ணீர் பாட்டில்கள், Turkey Towel மற்றும் தொப்பிகள் வழங்கப்பட்டன.
இந்த சமூகநல நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளின் மாநில ஆலோசகர் ரௌத்திரம் சக்திவேல் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்டப் பொருட்களை வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினார். மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இதுபோன்ற முயற்சிகள் தொடர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக நிர்வாகிகள் ஆனந்த் கண்ணன், மகேஷ் ரெட்டி, நாகராஜ் ஆகியோரும், புதுச்சேரி பொதுநலக் கழகத்தின் சார்பில் சிவசங்கரன், சந்தோஷ் மற்றும் புதுச்சேரி மாநில மாற்றுத்திறனாளிகள் ஒருங்கிணைப்பாளர் அசோக் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
கடுமையான கோடை வெயிலிலும் பொதுமக்களுக்கு இடையறாத சேவையாற்றி வரும் மாற்றுத்திறனாளி உணவு டெலிவரி பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த நலத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை பாராட்டி, நன்றியையும் அங்கீகாரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இந்த முயற்சி அமைந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற பயனாளிகள் மற்றும் பொதுமக்கள், இதுபோன்ற சமூகநலத் திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் பணிச் சூழலை மேம்படுத்துவதோடு, அவர்களுக்கு ஊக்கத்தையும் பாதுகாப்பையும் அளிக்கும் என தெரிவித்தனர்.