திருவாரூர்., ஜூலை.08

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு டெல்டா மாவட்டங்களில் பாசனம் நடைபெற்று வரும் சூழலில், இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்காத நிலையில் தற்போதைய நீர்மட்டம் 76 அடிக்கும் குறைவாக உள்ளதால் நீர் திறப்பது முற்றிலும் நடக்காது என விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

மேட்டூர் அணை திறக்கப்படாத சூழ்நிலையில் ஆழ்குழாய் கிணறு வைத்துள்ள விவசாயிகள் மூலமாக தான் குறுவை சாகுபடி மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் சுமார் 20000 ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. அதை வைத்து ஒரு லட்சம் ஏக்கர் அளவில் குறுவை சாகுபடி செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தை பொருத்தவரை இந்த ஆண்டு குருவை சாகுபடி இலக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கர் நிர்ணயிக்கப்பட்டு தற்பொழுது வரை 60,000 ஏக்கர் பரப்பளவில் முன் பட்ட குறுவை சாகுபடி நடைபெற்றுள்ளது.

பெரும்பாலும் நேரடி நெல் விதைப்பு மூலமாக நன்னிலம், குடவாசல், வலங்கைமான், கொரடாச்சேரி, திருவாரூர், கூத்தாநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த முன்பட்ட குறுவை சாகுபடி ஆழ்குழாய் கிணறு வைத்துள்ள விவசாயிகள் மூலமாக நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் வலங்கைமான், கண்டியூர், மணப்பறவை, நரசிங்கமங்கலம், நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு வைத்துள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் சரியான மின் அழுத்தத்தில் வழங்கப்படாததால் விவசாயிகள் சாகுபடி செய்த குறுவை பயிரை காப்பாற்ற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதனால் வயல்வெளிகள் காய்ந்து வெடித்து கிடைக்கின்றன. குறுவைப் பயிர்கள் கருகி வருகின்றன . திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 5000 ஏக்கருக்கு மேலான குறுவை சாகுபடி கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

மேலும் சரியான மின்னழுத்தத்தில் மின்சாரம் கொடுக்கப்படாததால் அடிக்கடி ஆழ்குழாய் கிணற்றில் உள்ள மின் மோட்டார்களும் பழுதாகி விவசாயிகளுக்கு கூடுதல் செலவு வைக்கின்றன.

ஆகவே திருவாரூர் மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணறு வைத்து குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் நிலைமையை அறிந்து தமிழக அரசு அந்த பகுதிகளுக்கு சரியான மின்னழுத்தத்தில் மின்சாரம் வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்கினால் தான் குறுவை சாகுபடியை காப்பாற்ற முடியும் என்றும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் தற்பொழுது குருவை சாகுபடி செய்து கருகி வரும் பயிர்கள் மற்றும் விளை நிலங்கள் முழுவதும் வெடித்து காய்ந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது எனவே வேளாண்துறை அதிகாரிகள் முறையாக உரிய கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *