நாகப்பட்டினம்,ஜூலை.8-
சேதமடைந்த மின்மாற்றிகள்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கொத்தமங்கலம் ஊராட்சி பகுதியில் சுமார் 300 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு மின்சார தேவை பூர்த்தி செய்ய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு அதிலிருந்து சீரான மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் பனங்காட்டூர் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக இரண்டு மின்மாற்றிகள் சேதம் அடைந்து ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு போதிய மின் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் வீடுகளில் பயன்படுத்தும் டிவி, குளிர்சாதன பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம், கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதம் அடையும் அபாயம் உள்ளது. மேலும் மின்சார பற்றாக்குறை காரணமாக இரவு நேரங்களில் தெருவிளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் வெளியில் வர அச்சப்பட்டு வருகின்றனர். இருளை பயன்படுத்தி கொள்ளை சம்பவங்கள் நடைபெறும் அச்சத்தில் அப்பகுதி பொதுமக்கள் இருந்து வருகின்றனர்.
நடவடிக்கை
இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரியத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே சேதமடைந்த இரண்டு மின்மாற்றிகளை சீரமைத்து கொத்தமங்கலம் ஊராட்சி பகுதியில் சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.