கல்பாக்கம், ஜூலை 9:

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்குட்பட்ட கூவத்தூர் ஊராட்சியில், செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் இராஜசேகர் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்காக வருகை தந்தார். அவரை அதிமுக மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ். ஆறுமுகம், இலத்தூர் ஒன்றிய செயலாளர் கே. வேலு உள்ளிட்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

தொடர்ந்து, கூவத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்த எம்.எல்.ஏ. இராஜசேகரை, ஊராட்சி மன்ற தலைவர் கே.பி. சகாதேவன் சால்வை அணிவித்தும், மலர்மாலை அணிவித்தும் வரவேற்றார்.

அப்போது, ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளின் வளர்ச்சிக்கான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கே.பி. சகாதேவன் வழங்கினார். அதில், பாலாற்றிலிருந்து குழாய் மூலம் குடிநீர் வழங்கி குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், கீழார்க்கொல்லை மற்றும் கூவத்தூர் பேட்டை பகுதிகளில் புதிய அங்கன்வாடி மையங்கள் அமைக்க வேண்டும், கூவத்தூர் கிழக்கு கடற்கரைச் சாலை பேருந்து நிறுத்தத்தில் இருபுறமும் பயணிகள் நிழற்குடைகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

மேலும், கிழக்கு கடற்கரைச் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதால், கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் அறைகள், நவீன மருத்துவ உபகரணங்கள், கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

அதேபோல், கூவத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலிருந்து சென்னைக்கு தினமும் காலை 7.00 மணி, 10.00 மணி மற்றும் மாலை 4.00 மணி, 6.00 மணிக்கு “கூவத்தூர் – சென்னை” என்ற பெயர்ப் பலகையுடன் அரசு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், வருவாய்த் துறையில் தற்போது “கொடூர் பிர்கா” என உள்ள பெயரை “கூவத்தூர் பிர்கா” என அரசாணை மூலம் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டது.

மனுவைப் பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் இராஜசேகர், பொதுமக்களின் நலன் கருதி அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து, சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *