மேச்சேரி, ஜூலை 9: சேலம் மாவட்டம் மேச்சேரியில் செயல்பட்டு வரும் காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், 2026–2027 கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களின் வரவேற்பு விழா மற்றும் வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை (ஜூலை 9) சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு கல்லூரி முதல்வர் முனைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். கல்லூரியின் கல்விச் செயல்பாடுகள், மாணவர்களின் முழுமையான வளர்ச்சியில் கல்வி நிறுவனத்தின் பங்கு மற்றும் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கி, புதிய மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் அவர் வரவேற்றார்.

தி காவிரி கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் ரேவதி இளங்கோவன் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார்.

தி காவிரி கல்வி நிறுவனங்களின் செயலாளர் பேராசிரியர் இளங்கோவன் தலைமையுரையாற்றியபோது, மாணவர்கள் ஒழுக்கம், கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றை வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும், தொழில்நுட்ப வளர்ச்சியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், “ஏழைக்குக் கல்வி கொடுத்தல்தான் சிறந்த தர்மம்” என்பதை மேற்கோள் காட்டி, கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தார்.

இணைச் செயலாளர் பொறியாளர் ஹரிசங்கர் வாழ்த்துரையாற்றி, மாணவர்கள் சுயசிந்தனையை வளர்த்துக் கொண்டு, கற்றல் திறன்களை மேம்படுத்தி, எதிர்கால சவால்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

விழாவில் தி காவிரி கல்வி நிறுவனங்களின் கௌரவ தலைவர் முனைவர் நடேசன், தலைவர் அன்பழகன், தாளாளர் இராமநாதன், துணைத்தலைவர் மதன் கார்த்திக், துறைத்தலைவர்கள், உதவிப் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கவிதா நன்றியுரை வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *