திருப்பூர் மாவட்டம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு: நான்கு வழிச்சாலையில் உள்ள 3,152 கோனோகார்பஸ் மரங்கள் அகற்றம் – பதிலாக வேம்பு, புளி, புங்கன் உள்ளிட்ட நாட்டு மரங்கள் நடவு
திருப்பூர் திருப்பூர், ஜூலை 11:
திருப்பூர் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் – தாராபுரம் – அவினாசிபாளையம் மாநில நெடுஞ்சாலை (மா.நெ.37) நான்கு வழிச்சாலையின் ஓரங்களில் வளர்ந்துள்ள 3,152 கோனோகார்பஸ் மரங்களை அகற்றி, அவற்றுக்கு பதிலாக வேம்பு, புளி, புங்கன் உள்ளிட்ட நாட்டு மரங்களை நடவு செய்து பராமரிக்க மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்–II (TNRSP-II) சார்பில், ஒட்டன்சத்திரம் – அவினாசிபாளையம் சாலையின் கி.மீ. 65/2 முதல் 108/4 வரை உள்ள பகுதியில் நடப்பட்டுள்ள கோனோகார்பஸ் மரங்களை அகற்ற அனுமதி கோரி நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தார். இந்த அறிக்கை மாவட்ட பசுமைக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியதன் பேரில் மரங்களை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அறிக்கையின்படி, எல்லப்பாளையம் பிரிவு (சாலக்கடை) முதல் அவினாசிபாளையம் வரை சாலையின் இருபுறங்களிலும் மொத்தம் 3,152 கோனோகார்பஸ் மரங்கள் உள்ளன. சென்னை தமிழ்நாடு பசுமை இயக்கம் கடந்த 2.6.2026 அன்று வெளியிட்ட சுற்றறிக்கையில், கோனோகார்பஸ் மரங்கள் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், இனி இந்த மரங்களை பொது இடங்களிலும் சாலை ஓரங்களிலும் நடவு செய்யக்கூடாது என்றும், ஏற்கனவே நடப்பட்ட மரங்களை அகற்றி, அவற்றுக்கு பதிலாக நாட்டு மரங்களை நடவு செய்து பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒட்டன்சத்திரம் – தாராபுரம் – அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலை திட்டம் கடந்த 2020-ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டபோது, சாலை விரிவாக்கப் பணிக்காக சுமார் 3,810 மரங்கள் அகற்றப்பட்டன. அதற்கு ஈடாக 38,150 புதிய மரக்கன்றுகள் நடப்பட்டு கடந்த ஆறு ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 3,152 மரங்கள் கோனோகார்பஸ் இனத்தைச் சேர்ந்தவை என நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.
அரசு முதன்மைச் செயலாளர் (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை) வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின் அடிப்படையில், கோனோகார்பஸ் மரங்கள் சுற்றுச்சூழலுக்கும் பொதுமக்களின் உடல்நலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அவற்றை அகற்றி வேம்பு, புளி, புங்கன் உள்ளிட்ட நாட்டு மரங்களை நடவு செய்து பராமரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, திருப்பூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட ஒட்டன்சத்திரம் – தாராபுரம் – அவினாசிபாளையம் நான்கு வழிச்சாலையின் இருபுறங்களிலும் உள்ள 3,152 கோனோகார்பஸ் மரங்கள் கட்டம் கட்டமாக அகற்றப்பட்டு, அதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நாட்டு மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.