தேனி, ஜூலை 11:
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சி, சிறைக்காடு கிராமத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆர். வைத்திநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மலைவாழ் பழங்குடியின மக்களின் கோரிக்கையை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர், அப்பகுதியில் உடனடியாக சோலார் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி, சோலார் விளக்குகள் நிறுவப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.
ஆய்வின்போது, கிராம சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்ததை கவனித்த மாவட்ட ஆட்சியர், அப்பகுதியில் விளையாட்டு மைதான வசதி இல்லாததை அறிந்தார். இதையடுத்து, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மக்கத்தம்மாள், ஜெகதீஸ் சந்திரபோஸ் மற்றும் ஊராட்சி செயலர் பொட்டு முருகேசன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, உடனடியாக விளையாட்டு மைதானம் அமைக்க உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, சிறைக்காடு கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் அந்த மைதானம் பொதுமக்கள் மற்றும் சிறுவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட உள்ளது.
மலைவாழ் பழங்குடியின மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் ஆர். வைத்திநாதனுக்கு அப்பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.