நாகப்பட்டினம்,ஜூலை.12-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சி குருவாடி கிராமத்தில் ஏழை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா பந்தகால் முகூர்த்தம், காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள், பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திறுநீர், தேன், திரவியம், மாப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதை தொடர்ந்து சந்தனகாப்பு அலங்காரம், கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து இரவு சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதியுலா நடைபெற்றது. இதில் குருவாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.