ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகேயுள்ள புதுப்பாளையம் நடுநிலைப்பள்ளியில் குருநாத சுவாமி கோவில் திருவிழாவையொட்டி தற்காலிக கடை அமைப்பது தொடர்பான ஏலம் இன்று நடைபெற்றது.அந்தியூர் பி.டி.ஓ., அமுதா, மேலாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அந்தியூர் அடுத்த வெள்ளைபிள்ளையார் கோவில் முதல் புதுப்பாளையம் பாலம் வரை சுமார் ஒன்றரை கி.மீ., தூரத்துக்கு இரு பக்கமும் அமைக்கக்கூடிய கடைகள் ஏலம் நடத்தப்பட்டது.


இதில், 23 லட்சத்து 63 ஆயிரத்து 500 ரூபாய் அரசு ஏலத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டது. ஏலத்தில் அந்தியூர் மற்றும் பவானி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 74 பேர் தலா 20,000 ரூபாய் டெபாசிட் தொகையை செலுத்தி ஏலத்தில் கலந்து கொண்டனர்.


ஏலம் தொடங்கியதும் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தனி நபருக்கு ஏலம் விடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இந்த ஏலத்தை தனிநபருக்கு விடாமல் அரசு ஏற்று நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்தது. அதிகாரிகள் தரப்பில் ஏலம் நடத்த முயற்சி செய்தபோது, புதுப்பாளையம் பொதுமக்கள், ஒருமித்த குரலில் ஏலத்தை கைவிட வேண்டும் என கோஷம் எழுப்பினர்.


பணம் கட்டியவர்கள், பொதுமக்களுக்கும், வியாபாரிகள் சங்கத்துக்கும் ஆதரவு தெரிவித்து ஏலத்தை தொடரவில்லை. இதனால், ஏலம் ரத்து செய்யப்பட்ட நிலையில், மறு ஏலம் வரும் 23ல் நடக்கும் என, உள்ளாட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *