தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பல கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட வாரச்சந்தையைத் திறப்பதில் நிலவும் இழுபறி மற்றும் வாடகை உயர்வைக் கண்டித்து, வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் சாலையில் காய்கறிகளைக் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
பேராவூரணியில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வரும் வாரச்சந்தை, பேருந்து நிலையம் அருகே ரூ. 2.93 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே பணிகள் நிறைவடைந்த நிலையில், சந்தையைத் திறக்க பேரூராட்சி நிர்வாகம் தாமதம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த ஒரு வருடமாகத் தனியார் இடத்தில் வாடகை கொடுத்துத் தொழில் செய்து வந்த சிறு வியாபாரிகள், தற்போது திடீரென வாடகை பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
போராட்டத்தின் பின்னணி
கடந்த 9-ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில், கடந்த முறையை விட இருமடங்கு அதிகமான தொகைக்குச் சந்தை ஏலம் போனது. இதனால், பேரூராட்சி நிர்வாகம் வியாபாரிகளிடம் லட்சக்கணக்கில் முன்பணம் கேட்பதாகவும், தினசரி வாடகையை ஆயிரக்கணக்கில் உயர்த்திவிட்டதாகவும் வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, தனியார் இடத்தில் நடத்தப்பட்டு வந்த வாரச்சந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டது. ஆனால், இன்று காலை சந்தைக்கு வந்த வியாபாரிகளுக்குப் புதிய சந்தையின் கேட் பூட்டப்பட்டிருந்தது அதிர்ச்சியை அளித்தது.
இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள், பேராவூரணி – அறந்தாங்கி சாலையில் காய்கறிகளைக் கொட்டி காலை 5.30 மணி முதலே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது. “மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து தீர்வு காண வேண்டும்” என முழக்கமிட்டு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
பிறகு கேட்டை உடைத்து உள்ளே புகுந்தனர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஆத்திரமடைந்த வியாபாரிகள் வாரச்சந்தையின் இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர். அங்கு தங்களுக்குப் பிடித்த இடங்களில் கடைகளை அமைக்கத் தொடங்கியதால், ஏற்கனவே கடை வைத்திருந்தவர்களுக்கும் புதியவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் அண்ணாதுரை, தனபாலன் ஆகியோர் வியாபாரிகளிடம் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். பெரும் எண்ணிக்கையிலான வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் திரண்டிருப்பதால், பேராவூரணி நகர் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த விவகாரத்தில் அதிகாரிகளின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேராவூரணி செய்தியாளர் நீலகண்டன்