கோவை:
உலகமெங்கும் ஜூலை 23ஆம் தேதி ஆவலுடன் எதிர்பார்க்கப்படும், தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் அவர்கள் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை வரவேற்கும் விதமாக, கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த பிரபல கலைஞர் யு.எம்.டி.ராஜா தண்ணீருக்குள் க்ரையான் எனப்படும் மெழுகு பென்சில்களைக் கொண்டு தத்ரூபமாக ஓவியம் வரைந்து அசத்தியுள்ளார்.
கடந்த ஆறு மாத கால போராட்டத்திற்குப் பிறகு, மக்கள் தளபதியாக இருந்த விஜய் அவர்கள் தற்போது தமிழக முதல்வராக ‘ஜனநாயகன்’ படத்தின் டைட்டில் கார்டில் தோன்றுவதை ரசிகர்கள் திருவிழா போலக் கொண்டாடக் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தும் விதமாக இந்த வித்தியாசமான முயற்சியை அவர் மேற்கொண்டுள்ளார்.
கடந்த மூன்று தினங்களாக தண்ணீருக்குள் கொஞ்சம் கொஞ்சமாக பச்சை, சிவப்பு, மஞ்சள், வெள்ளை போன்ற பல்வேறு வண்ணங்களைப் பயன்படுத்தி, தமிழக முதல்வர் விஜய்யின் முகம், ‘ஜனநாயகன்’ என்ற வாசகம் மற்றும் ‘மரியாதைக்குரிய தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்’ என்ற ஆங்கில வார்த்தைகளையும் அவர் ஓவியமாகத் தீட்டியுள்ளார். இந்தத் தண்ணீர் ஓவியத்திற்குள் வண்ண மீன்களையும் விட்டு அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
சுமார் 10 தினங்களுக்கு மேலாக தண்ணீரில் கரையாமல் அப்படியே ஜொலிக்கும் வகையில் பிரத்யேக வர்ணங்களை இதில் அவர் பயன்படுத்தியுள்ளார். பேனர்கள், கட்டவுட்டுகள் மற்றும் வண்ணத் தோரணங்கள் வைத்து வழக்கமான முறையில் கொண்டாடும் ரசிகர்கள் மத்தியில், இந்த வித்தியாசமான தண்ணீர் ஓவியத்தை விஜய் ரசிகர்களின் பார்வைக்கு வைத்து கொண்டாடத் திட்டமிட்டுள்ளதாக கலைஞர் யு.எம்.டி.ராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.