தமிழகம் முழுவதும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் நடைமுறையில் இருக்கும் கட்டண தரிசன முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோவையில் இந்து முன்னணி சார்பில் 2,000-க்கும் மேற்பட்டோர் திரண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை, சிவானந்த காலனி, பவர் ஹவுஸ் பகுதியில் இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு கோவில்களில் தரிசனக் கட்டண முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் திரண்டு கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அன்னையர் முன்னணி நிர்வாகிகள், “திருப்பரங்குன்றத்தில் பாரம்பரியமாக ஏற்றப்படும் தீபத்தை எந்தவித தடங்கலுமின்றி ஏற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை – எளிய பக்தர்கள் கோவில்களில் இறைவனைத் தரிசிக்கக் கட்டணம் வசூலிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்” எனத் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு நேரடி கோரிக்கை விடுத்து வலியுறுத்தினர்.

​தொடர்ந்து பேசிய இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சதீஷ்,

“அரசு கோவில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி தமிழகம் தழுவிய அளவில் இந்த போராட்டம் நடந்து வருகிறது. மறைந்த ஐயா ராமகோபாலன் ஜி நீண்ட காலமாக இந்துக்களை ஒன்றுபடுத்தப் போராடினார். அதன் பலனாகத் தற்போது இந்து சமுதாயம் விழிப்புணர்வு அடைந்து வருகிறது. முருக பக்தர்கள் மாநாடு போன்றவை இதற்குச் சான்று. கூடிய விரைவில் ‘இந்து ஓட்டு வங்கி’ உருவாக்கப்படும் போது தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும்” என பேசினார்.

மேலும் பேசிய அவர், “கோவை அருள்மிகு கோனியம்மன் கோவிலில் பிரம்மாண்ட உண்டியல் திருட்டு நடைபெற்று உள்ளது. ஒரு முழு உண்டியலே காணாமல் போய் உள்ளதுடன், பக்தர்கள் செலுத்திய பல லட்சம் ரூபாய் காணிக்கைகள் கையாடல் செய்யப்பட்டு உள்ளன. ஆனால், அரசும் இந்து சமய அறநிலையத் துறையும் இந்த விவகாரத்தை மறைக்கப் பார்க்கிறது. இருப்பினும், தவறு செய்த கோவில் ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்த கோவை காவல் துறைக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை கோட்ட பொதுச்செயலாளர் பாபா கிருஷ்ணன், கோட்டச் செயலாளர் உருவை பாலன், மாவட்டத் தலைவர் தசரதன், மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், மாவட்டச் செயலாளர்கள் ஆறுச்சாமி, மகேஸ்வரன், போத்தனூர் ஆனந்த், சதீஷ், செல்வா மற்றும் மாவட்ட நகரம் ஒன்றிய பொறுப்பாளர்கள் 2,000-க்கும் மேற்பட்டோர் திரண்டு நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *