திருப்பத்தூர்,

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், உலகப் புகழ்பெற்ற விண்வெளி மற்றும் ஏவுகணை விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் நினைவு நாள் (ஜூலை 27) திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியில் பொதுமக்கள் பங்கேற்புடனும் அனுசரிக்கப்பட்டது.

இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராக பணியாற்றிய டாக்டர் அப்துல் கலாம், “ஏவுகணை நாயகன்” மற்றும் “மக்களின் ஜனாதிபதி” என உலகம் முழுவதும் போற்றப்படுகிறார். எளிமை, நேர்மை, தேசப்பற்று, கல்வி மீதான அர்ப்பணிப்பு மற்றும் இளைஞர்களுக்கு அவர் வழங்கிய ஊக்கமூட்டும் வழிகாட்டுதல் இன்றளவும் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறது.

நினைவு நாள் நிகழ்ச்சியின் தொடக்கத்தில், டாக்டர் அப்துல் கலாமின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, டாக்டர் அப்துல் கலாமின் “பசுமையான இந்தியா” என்ற கனவை நனவாக்கும் நோக்கில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒரு மரமாவது நட்டு பராமரிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், வாணியம்பாடி பொன்னேரி முன்னாள் ஊராட்சித் தலைவர் கே. ராஜேந்திரன் தலைமையில் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று டாக்டர் அப்துல் கலாமின் நினைவைப் போற்றினர்.

நிகழ்ச்சியின் நிறைவில், “மரம் வளர்ப்போம் – இயற்கையை காப்போம்; அப்துல் கலாமின் கனவை நனவாக்குவோம்” என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed