கம்பம், ஜூலை 28:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் புளியன்மலையில் பிளான்டர்ஸ் கிளப்பின் 25-வது ஆண்டு வெள்ளி விழாவும், ஏலக்காய் விவசாயிகள் மாநாடும் நடைபெற்றது. விழாவிற்கு கேரள மாநில வருவாய் மற்றும் நிலத்துறை அமைச்சர் ஏ.பி. அனில் குமார் தலைமை தாங்கினார்.

மாநாட்டில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா, கேரள அரசு தலைமை கொறடா அபு ஜான் ஜோசப், இடுக்கி, உடும்பன்சோலை, பீர்மேடு, தேவிகுளம் தொகுதி எம்.எல்.ஏ.க்கள், இடுக்கி மாவட்ட கலெக்டர் டாக்டர் தினேசன் செறுவாட், தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சி. சிரியாக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் பேசிய கம்பம் எம்.எல்.ஏ. பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா, முல்லைப் பெரியார் அணையிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் சுரங்கக் கால்வாய் நீரில், கேரள மாநிலம் குமுளி பஞ்சாயத்து பகுதியில் இருந்து கழிவுநீர் கலப்பதாகக் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தன் ஏற்கனவே கேரள அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதையும், தாமும் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்திருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.

லட்சக்கணக்கான தமிழக மக்கள் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக பயன்படுத்தும் முல்லைப் பெரியாற்றில் கழிவுநீர் கலப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இந்த நீரையே பயன்படுத்தி விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள், நெல் உள்ளிட்ட விவசாய விளைபொருட்கள் கேரளாவிற்கும் அனுப்பப்படுவதால், இந்த பிரச்சினை இரு மாநில மக்களையும் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். எனவே, இரு மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை அரசியல் கண்ணோட்டத்தில் அணுகாமல், இரு மாநில மக்களின் வாழ்வாதார பிரச்சினையாகக் கருதி தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தேவாரம்–சாக்குலூத்து மெட்டு சாலை அமைப்பது தமிழக–கேரள மக்களின் நீண்டகால கோரிக்கை என்றும், தமிழக எல்லைக்குள் சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டும் சாலை அமைக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார். ரூ.150 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான அனுமதியைப் பெற தமிழக அரசின் பொறுப்பு அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் தேனி மாவட்ட கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் சாலைப் பணிகள் தொடங்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தச் சாலை அமைந்தால் இடுக்கி மாவட்ட மக்களுக்கு தமிழகம் வருவது எளிதாகும். குறிப்பாக மருத்துவம், வர்த்தகம் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு பெரிதும் பயனளிப்பதுடன், இரு மாநில மக்களையும் இணைக்கும் முக்கிய சாலையாக அமையும் என்றும் அவர் கூறினார்.

மேலும், இடுக்கி மாவட்டம் முழுவதும் உள்ள ஏலக்காய் தோட்டங்களை டிஜிட்டல் முறையில் கணக்கெடுத்து, விவசாயிகளுக்கு விரைவாக பட்டாக்கள் வழங்க கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்தியாவின் ஏலக்காய் உற்பத்தியில் இடுக்கி மாவட்டம் முக்கிய பங்கு வகிப்பதால், விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பட்டா வழங்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் கம்பம் தொகுதி செயலாளர் கூடல் செல்வேந்திரன், மாவட்ட பொறுப்பாளர்கள் ராம்குமார், அபுதாகிர், நகர பொறுப்பாளர்கள் அய்யர், எல்.ஆர். சுப்பிரமணி உள்ளிட்டோர் மற்றும் தமிழக–கேரள ஏலக்காய் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *