செங்கல்பட்டு, ஜூலை 28: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தனி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விசில் சின்னத்தில் போட்டியிட்டு 62,090 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்த எழில் கேத்ரின், தேர்தலுக்குப் பிறகும் தொடர்ந்து கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கட்சித் தலைவர் ஜோசப் விஜய் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, தேர்தல் முடிந்த பின்னரும் மதுராந்தகம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் எழில் கேத்ரின் பங்கேற்று வந்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மாவட்டச் செயலாளர் எம்.எஸ். பாலாஜி, எழில் கேத்ரினை கட்சியின் நிகழ்ச்சிகளுக்கு அழைக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், சில நிர்வாகிகளிடம் மிரட்டும் தொனியில் நடந்து கொள்வதாகவும் சமூக வலைதளங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் குற்றச்சாட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், தலைமை அறிவிப்பின் பேரில் தேர்தலில் இரண்டாம் இடம் பெற்ற வேட்பாளரான எழில் கேத்ரினுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்றும், இந்த விவகாரத்தில் கட்சித் தலைமை தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இதுகுறித்து மாவட்டச் செயலாளர் எம்.எஸ். பாலாஜியின் தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை.