கோவை,

கே.பி.ஆர். கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியின் நுண்ணறிவு அமைப்புகள் மற்றும் தரவு அறிவியல் பள்ளியின் கணினி அறிவியல் மற்றும் தரவு பகுப்பாய்வு துறை மற்றும் தேசிய மாணவர் படை (NSS) இணைந்து, நீலாம்பூரில் “தலைக்கவசம் அணிவோம் – உயிரைக் காப்போம்” என்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் பி. கீதா தலைமை தாங்கினார். இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் அனைவரும் தரமான தலைக்கவசம் அணிந்து, சாலை விதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கணினி அறிவியல் மற்றும் தரவு பகுப்பாய்வு துறையின் தலைவர் முனைவர் ஜி. சத்யவதி முன்னிலை வகித்தார். தேசிய மாணவர் படை (NSS) திட்ட அலுவலர் திரு. எம். கார்த்திக் நிகழ்ச்சியை வழிநடத்தினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக உதவி பேராசிரியர் முனைவர் மு. மனோஜ் செயல்பட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

சிறப்பு விருந்தினர்களாக நீலாம்பூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. தியாகராஜன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் திரு. சந்திரசேகரன் கலந்து கொண்டு, தலைக்கவசம் அணிவதன் அவசியம், சாலை விதிகளைப் பின்பற்றுதல், அதிக வேகத்தைத் தவிர்த்தல் மற்றும் பாதுகாப்பான வாகன ஓட்டம் குறித்து மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்வில் NSS தன்னார்வலர்கள் நீலாம்பூர் பகுதியில் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். மேலும், சாலை விதிகளைப் பின்பற்றுதல், மது அருந்தி வாகனம் ஓட்டுவதைத் தவிர்த்தல், வாகனம் ஓட்டும் போது கைப்பேசி பயன்படுத்தாதிருத்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், NSS தன்னார்வலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, “தலைக்கவசம் அணிவோம் – உயிரைக் காப்போம்” என்ற முழக்கத்துடன் நிறைவடைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *