தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்,
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.

தஞ்சாவூர், செப்.18- தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் இயங்கி வரும் கைவினைத் தொழிலாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத்தின் சார்பில், நவராத்திரி விழாவினை முன்னிட்டு சிறப்பு “கொலு விற்பனை” கண்காட்சியை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வி. பிரபு ஜெயக்குமார் மோசஸ் தொடங்கிவைத்தார்.

தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சங்கீத மஹால் மாடியில் கடந்த 1958-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கூட்டுறவு சங்கத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, கடலூர், மதுரை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள கைவினை கலைஞர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட கைவினைப் பொருட்கள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.

இதில் காமாட்சி விளக்கு, பூஜை செட், விநாயகர் செட், அஷ்டலட்சுமி செட், சப்தமாதா செட், கருடசேவை செட், கர்ணன் செட், குற்றால அருவி செட், முப்பத்து முக்கோடி தேவர்கள் செட், நளவெண்பா செட், நரசிம்மர் செட், 18 சித்தர்கள் செட், நவதானிய செட், மாயா பஜார் செட், கொல்கத்தா பொம்மைகள் போன்ற ஏராளமான பொம்மைகள் மற்றும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் ஆகியவை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு ஆண்டு தோறும் நவராத்திரியை ஒட்டி கொலு விற்பனை மற்றும் கண்காட்சி நடப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு கொலு விற்பனை கண்காட்சியை மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வி.பிரபு ஜெயக்குமார் மோசஸ் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். உதவி இயக்குனர் ஜி. விஜயகுமார், கணக்காளர் புஷ்பலதா, காசாளர் ஹேமலதா, உதவியாளர் செந்தில் மற்றும் சங்கப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்த கண்காட்சியில் கொலு பொம்மைகளுக்கு 10 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இக்கண்காட்சி நேற்று 17ம் தேதி முதல் வரும் அக்-20ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. கடந்தாண்டு ரூ.23 லட்சம் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் ரூ.22 லட்சம் விற்பனை நடந்தது. அதேபோல் இந்தாண்டு ரூ.26 லட்சத்திற்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தாண்டு புது வரவாக பஞ்சபூத செட், பூரி ஜெகன்நாதர் செட், வரலட்சுமி விரதம் செட், நிச்சயதார்த்தம் செட், பழங்கால விளையாட்டுக்கள் செட், முத்தாரம்மன் பொம்மை, டாக்டர், நர்ஸ், போலீஸ், வக்கீல் பொம்மைகள், துலாபார செட், கிருஷ்ணன் விளையாட்டுகள் செட், துளசி கல்யாணம் செட் போன்றவை வந்துள்ளது.

பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பு கொலு கண்காட்சியினை நேரில் கண்டு, பொம்மைகளை வாங்கிப் பயன்பெறுமாறு தஞ்சாவூர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரபு ஜெயக்குமார் மோசஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *