மன்னார்குடி., செப்.24-

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை கிராமத்தில் குடிநீர் கேட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பரவாக்கோட்டை மீன் மார்க்கெட் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மின் மோட்டார் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். தினமும் 5 முதல் 10 நிமிடங்கள் மட்டுமே குடிநீர் வருவதால் குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் போதிய தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக பெண்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், குடிநீர் வினியோக நேரத்தை அதிகரிக்கக்கோரி கேட்டபோது, மின் மோட்டாரை இயக்கும் ஆபரேட்டர் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியதாகவும் பெண்கள் குற்றம்சாட்டினர்.

இதையடுத்து ஆத்திரமடைந்த பெண்கள், ஆபரேட்டரை மாற்ற வேண்டும், முறையாக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் எனக்கோரி ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த பரவாக்கோட்டை போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அங்கு சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிமேல் தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *