திருவாரூர்., செப்.24–
திருத்துறைப்பூண்டி அருகே ஊனமுற்ற 22 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 பேருக்கு தலா 20 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நெம்மேலி ஜீவா தெருவை சேர்ந்தவர்கள் கோபி (49), சின்னதுரை (56), ஜீவா (41).
கடந்த 29.7.2020 அன்று 22 வயது ஊனமுற்ற பெண் தனது தோழிகளுடன் வயலுக்கு சென்றிருந்தார். அப்போது அன்னக்கூடையை மறந்து வைத்து விட்டதாக கூறி, அதை எடுத்து வருவதாக கூறிவிட்டு தனியாக சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் தோழிகள் அவரை தேடினர். அப்போது அருகில் உள்ள பருத்தி வயலில் அந்த பெண் கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் நடந்த சம்பவம் குறித்து அந்த பெண் தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது தாயார் கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபி, சின்னதுரை, ஜீவா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். வழக்கின் விசாரணை திருவாரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், கோபி, சின்னதுரை, ஜீவா ஆகிய 3 பேருக்கும் தலா 20 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரத்ராஜ் தீர்ப்பு அளித்தார்.
இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரையும் போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.