கூத்தாநல்லூர்., செப்.24-

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கான புதிய கட்டடத்தை நாகங்குடியில் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாற்றி, பொதுமக்களுக்கு வசதியான இடத்தில் அமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

கூத்தாநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் தற்போது வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தரக் கட்டடம் கட்டுவதற்காக கூத்தாநல்லூர் நகரப் பகுதியிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள நாகங்குடி கிராமத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இவ்விடத்தில் பொதுமக்களுக்குத் தேவையான போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை எனக் கூறிய போராட்டக்குழுவினர், மாணவர்கள், பெண்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எளிதில் வந்து செல்லும் வகையில் திருவாரூர்–மன்னார்குடி நெடுஞ்சாலையில் இடம் தேர்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சு.பாலசுப்ரமணியன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக மாவட்டத் தலைவர் ஏ.குத்புதீன், மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் டி.சண்முகசுந்தரம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மோகன், அருள்மணி, ஒன்றியக் கவுன்சிலர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் பங்கேற்ற பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *