திருவாரூர்., செப்.24-
திருத்துறைப்பூண்டி அருகே 12-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவரின் பெற்றோர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
ராயநல்லூர் மேலத்தெருவைச் சேர்ந்த ஹரிகிஷோர் (17), திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் செயல்பட்டு வரும் சாய்ராம் மெட்ரிக் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 18-ம் தேதி திருத்துறைப்பூண்டியில் உள்ள வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
படிப்பில் சிறந்து விளங்கிய ஹரிகிஷோர், அறிவியல் மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆராய்ச்சிகளில் ஆர்வம் கொண்டிருந்ததாகவும், கணினி அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்டு பாராட்டு சான்றிதழ்களைப் பெற்றிருந்ததாகவும் அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
இந்நிலையில், மாணவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதி வைத்ததாக கூறப்படும் கடிதம் தொடர்பாக பெற்றோர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் குறித்து மாணவர் குறிப்பிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
காவல்துறை விசாரணையில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி அதிருப்தி தெரிவித்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார், மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
இதையடுத்து, ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இருவரும் மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விரிவாக விசாரணை நடத்தி, அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
பின்னர் பெற்றோர் கூறியதாவது:
“எங்கள் மகன் பள்ளியில் தொடர்ந்து மனரீதியாக பாதிக்கப்பட்டதாக சக மாணவர்களிடம் கூறியுள்ளார். இறப்பதற்கு முந்தைய நாளும் அவர் அவமானப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக மாணவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் பல்வேறு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளியில் இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் இருந்தால் அவர்களது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்” என்றனர்.