குண்டடம்,தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420
திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே வஞ்சிபாளையம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விற்பனைக்காக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வஞ்சிபாளையம் பகுதியில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை சிற்பக் கலைஞர்கள் தயாரித்து வருகின்றனர்.
நீரில் எளிதில் கரையும் வகையில் மரவள்ளிக்கிழங்கு மாவு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி, அரை அடி முதல் 10 அடி உயரம் வரையிலான சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 6 மாதங்களாக சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பாம்பே கணபதி, எலி கணபதி, அம்மையப்ப கணபதி, குடும்ப விநாயகர், சிவன்–பார்வதி–முருகன் குடும்பத்துடன் கூடிய விநாயகர், பாகுபலி விநாயகர், சூரனை வதம் செய்யும் விநாயகர், மான் விநாயகர், மாடு விநாயகர், கஜ விநாயகர், பாம்பின் மீது அமர்ந்திருக்கும் விநாயகர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட வித்தியாசமான வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சக்தி கூறியதாவது:
“கடந்த 6 மாதங்களாக இரவு, பகலாக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு, நீரில் எளிதில் கரையும் வகையில் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் ஆர்வத்துடன் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர். இந்த ஆண்டு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஆர்டர்கள் வந்துள்ளன. இதன் மூலம் சிலை தயாரிக்கும் கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படுகிறது” என்றார்.