தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஒன்றியம், நஞ்சியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குப்பிச்சிபாளையம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர், கழிப்பிடம், நூலகம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக்கோரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கிராமசபைக் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் தனபால் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, குப்பிச்சிபாளையம் கிராம மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து பஞ்சாயத்து அலுவலர்களிடம் மனு அளித்தனர். மேலும், இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையும் நடத்தினர்.

அப்போது, குப்பிச்சிபாளையம் கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, நூலகம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைவில் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பஞ்சாயத்து நிர்வாகத்தினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் தனபால் கூறுகையில், “குப்பிச்சிபாளையம் கிராம மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அரசு நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், கிராம மக்களைத் திரட்டி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அதன்பிறகும் நடவடிக்கை இல்லையெனில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.

நிகழ்ச்சியில் ஈரோடு மண்டல துணைச் செயலாளர் தமிழ்முத்து, பொது நிர்வாகம் மற்றும் மாவட்டத் துணைச் செயலாளர் உதயகுமார், ஒன்றியச் செயலாளர் தனபால், மாநில கலைப்பிரிவு துணைச் செயலாளர் திருமா ரகு, இளஞ்சிறுத்தை பாசறை பொறுப்பாளர் பொன்னுச்சாமி, மகளிர் அணி நிர்வாகி சங்கீதா, நிர்வாகி மனோஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *