தமிழர்களின் பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி. முன்னெடுப்பில் தூத்துக்குடியில் நடைபெற்று வந்த 5-வது நெய்தல் கலைத் திருவிழா இன்று நிறைவடைந்தது.

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் கடந்த 14-ஆம் தேதி தொடங்கிய இந்த மூன்று நாள் கலைத் திருவிழா, 16-ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற மற்றும் மண்ணின் கலைஞர்கள் பங்கேற்று தங்களது பாரம்பரிய கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர்.

கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், குச்சியாட்டம், துடும்பாட்டம், ஜிம்பளா மேளம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவின் முதல் நாளில் கணேஷ்கா சிலம்பம், தேவராட்டம், பெரிய மேளம், தேன்மொழி ராஜேந்திரனின் கரகம், சேவா ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இரண்டாம் நாளில் கணியான் கூத்து, தப்பாட்டம், கும்மி–கோலாட்டம் மற்றும் கேபர் வாசுகியின் மெல்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் தமிழன்டா கலைக்குழு, உவரி களியல் குழு, ஸ்டார் ஜிக்காட்ட கலைக்குழு ஆகியோரின் கலை நிகழ்ச்சிகளுடன், குஜராத்தைச் சேர்ந்த சித்தி கோமா நடனமும் இடம்பெற்றது. நெய்தல் கலைத் திருவிழாவின் மற்றொரு சிறப்பம்சமாக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகைகளை பொதுமக்கள் அறிந்து ரசிக்கும் வகையில் 30-க்கும் மேற்பட்ட உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. மூன்று நாட்களிலும் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

அழிவின் விளிம்பில் இருந்த பல்வேறு நாட்டுப்புறக் கலைகளுக்கு சங்கமம் மற்றும் நெய்தல் கலைத் திருவிழா போன்ற நிகழ்வுகள் மூலம் மறுவாழ்வு கிடைத்து வருவதாகவும், இதன் மூலம் ஆயிரக்கணக்கான நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளதாகவும் கலைஞர்கள் தெரிவித்தனர்.
நாட்டுப்புறக் கலைகளையும் கலைஞர்களையும் தொடர்ந்து ஊக்குவித்து வரும் கனிமொழி கருணாநிதி எம்.பி.க்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும், இந்த விழாவில் கனிமொழி எம்பி பேசும்போது., புதிய நிகழ்வுகளையும், புதிய கலைஞர்களையும் கொண்டு வரும்போது, பார்வையாளர்களின் கைதட்டலும் ஆர்வமும், அவர்கள் அந்தக் கலைஞர்களை எந்த அளவுக்கு ரசிக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்தக் கைதட்டல் கலைஞர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை அளிப்பதோடு, அவர்கள் தொடர்ந்து பயணிக்கவும், தங்களது கலைப்பணியை முன்னெடுத்துச் செல்லவும் ஒரு மருந்தாக மாறுகிறது என்றார்.

இந்த விழாவில் தொடர்ந்து, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், ஆகியோர் இருந்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *