தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு ஒருமுறையாவது முழு கொள்ளளவு தண்ணீர் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி, உப்பாறு பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

உப்பாறு அணையின் மூலம் சுமார் 6,060 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக போதிய தண்ணீர் இல்லாமல் அணை வறண்டு காணப்படுகிறது.

விவசாயிகளின் தொடர் போராட்டங்களின் காரணமாக, திருமூர்த்தி அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை அரசூர் மதகு வழியாக உப்பாறு அணைக்கு கொண்டு வந்து சேர்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இருப்பினும், உப்பாறு அணைக்கு போதிய அளவு தண்ணீர் வழங்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

மேலும், உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், நீர்வளத்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கால் தண்ணீர் வழங்கப்படவில்லை என்றும், அணையின் மேல்மட்டப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் கோழிப்பண்ணைகளுக்கு முறைகேடாக தண்ணீர் வழங்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

ஒரே மண்டலத்தில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் நீர்வளத்துறை அதிகாரிகள் உப்பாறு அணை விவசாயிகளின் நலனுக்கு எதிராக செயல்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வேறு மண்டலங்களுக்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும், உப்பாறு அணைக்கு உடனடியாக தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்தகட்டமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, தாராபுரம் காவல்துறையினர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகளும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *