நாகப்பட்டினம்,ஆக.19-
திருமருகல் பகுதியில் விவசாயிகள் உழவுபணியை தொடங்கி உள்ளனர். நிலங்களை டிராக்டர் கொண்டு உழுது தயார் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


உழவு பணிகள்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதியில் சுமார் 20 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் உள்ளன. பெரும்பாலான நிலங்கள் வானம், காவிரி நீரை நம்பியுள்ள பூமியாகும். ஆண்டுக்கொருமுறை பெய்யக்கூடிய பருவமழை மற்றும் காவிரி நீரை கொண்டு விவசாயிகள் பயிரிடுவது வழக்கம். இந்த வகையில் திருமருகல் பகுதியில் விவசாயிகள் சம்பா பருவத்திற்கு தங்கள் நிலங்களை கடந்த சில நாட்களாக டிராக்டர் கொண்டு உழவு செய்து தயார்படுத்தி வருகின்றனர். பயிர்கள் நன்கு செழிப்பாக வளர்ந்து கதிர் திரட்சியாக மணி பிடிக்கவும், பயிர்களுக்கு நன்மை செய்யக்கூடிய மண்புழுக்கள் இனப்பெருக்கத்தை அதிகப்படுத்தவும், ஆட்டுக்கிடை மற்றும் மாட்டுக்கிடை போட்டும், சில விவசாயிகள் வீடுகளில் வளர்க்கும் கால்நடை சானங்களை சேமித்து வைத்து இயற்கை உரங்களாக நிலங்களுக்கு எடுத்து சென்று கோடை உழவில் அதை தூவி வருகின்றனர்.


ரசாயன உரம்
கால்நடைகள் பல ஆண்டுகளாக குறைந்து வருவதால் ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டிய நிலை சமீப காலமாக அதிகரித்துள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் அடி உரம் யூரியா, டி.ஏ.பி.க்கு விதைப்பு சமயத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் உரம் கிடைக்காமல் கடந்த காலங்களில் விவசாயிகள் சிரமப்பட்டனர். இந்த ஆண்டு உரத்தட்டுப்பாடு ஏற்படாமலும், உர விற்பனையில் முறைகேடுகள் நடைபெறாமலும் சம்மந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேட்டூர் அணையில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி வரும் நிலையில் உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *