லாரி ஓட்டுநர்கள் இருவர் உள்ளிட்ட 3 பேர் கைது
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி அருகே ஒடிசாவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ கஞ்சாவை எண்ணூர் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி ஓட்டுநர்கள் இருவர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கஞ்சா வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த தினேஷ் என்பவருடன் தொடர்பில் இருந்த லாரி ஓட்டுநர் ஒருவரை எண்ணூர் தனிப்படை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஒடிசாவில் இருந்து கஞ்சா ஏற்றிக்கொண்டு வந்த லாரியை கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி அருகே தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அப்போது லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் வெங்கட்ராமன் (35), கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் செந்தில்குமார் (34), விருத்தாசலத்தைச் சேர்ந்த கொத்தனார் ஆனந்த் (41) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள்மீது வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட செந்தில்குமார் மீது விருத்தாசலம் டவுன் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கும், ஆனந்த் மீது விருத்தாசலம் பெரியார் நகர் காவல் நிலையத்தில் காயப்படுத்தியதாக ஒரு வழக்கும் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கஞ்சா கடத்தல் சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.