நாகப்பட்டினம்:- ஆகஸ்ட், 21- திருமருகல் ஒன்றியப் பகுதிகளான திட்டச்சேரி, திருமருகல், சியாத்தமங்கை, அண்ணாமண்டபம், குருவாடி, திருப்புகலூர், வவ்வாலடி ஏனங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து 300-க்கும் அதிகமான மாணவ மாணவியர்கள் நாகையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் காலை 7 மணி முதல் 10 மணி வரை கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் என அதிக அளவில் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர்.
இதனால் திருமருகல், திட்டச்சேரி, பனங்குடி பகுதிகளில் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இடமில்லாமல் ஆபத்தான நிலையில் படிகளில் தொங்கி கொண்டு செல்கின்றனர். இதனால் படிக்கட்டுக்கள் உடைந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தேர்வு நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வர பஸ் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் ஆபத்தான நிலையில் படிகளில் தொங்கிக் கொண்டு செல்கின்றனர். நாகையில் இருந்து திட்டச்சேரிக்கும், மருங்கூருக்கும் சென்றுவந்த 2 பேருந்து நிறுத்தப்பட்டதே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் என பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.நடவடிக்கை
இதுகுறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கைகள் வைத்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கூடுதலாக திட்டச்சேரி வழியே நாகைக்கு பஸ் இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.