குரும்பர் சமுதாய மக்களை பழங்குடியினர் (எஸ்.டி.) பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இதுதொடர்பாக சட்டமன்ற கூட்டத்தொடரில் பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் சௌம்யா அன்புமணி கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், குரும்பர் சமுதாய மக்களின் கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவர்களை எஸ்.டி. பிரிவில் இணைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார்..

இந்நிலையில் இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அனைத்து குரும்பர் சமுதாய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.கிருஷ்ணசாமி, குரும்பர் சமுதாய மக்களின் சுமார் 40 ஆண்டு கால கோரிக்கைக்கு தற்போது முக்கியத்துவம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் குரும்பர் சமுதாய மக்களின் கோரிக்கையை முன்வைத்து பேசியவர்களுக்கும், அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சருக்கும் அனைத்து குரும்பர் சமுதாய மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

மேலும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், குரும்பர் சமுதாய மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த நேரத்தில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை நடத்தி வரும் தமிழக முதல்வருக்கும், அனைத்து குரும்பர் சமுதாய மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குரும்பா சமுதாய கூட்டமைப்பு தலைவர் ஆர்.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *