தேனி மாவட்டம் சின்னமனூரில் தமிழக வெற்றி கழகம் தேனி தென்மேற்கு மாவட்ட கழகம் சார்பில், தமிழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக பொருளாளர் கவுதம் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் கூடல் செல்வேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக பேச்சாளர் அபுதாகீர் அனைவரையும் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் தேனி தென்மேற்கு மாவட்ட கழக செயலாளரும், கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான ஜெகநாத் மிஸ்ரா, மாநில செய்தித் தொடர்பாளர் சௌந்தர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. பேச்சு
கூட்டத்தில் ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. பேசியதாவது:
கம்பம் சட்டமன்ற தொகுதி கடந்த தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் போதிய பணிகள் மேற்கொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்ட தொகுதியாக இருந்தது. இதுகுறித்து சட்டமன்றத்திலும் நான் பேசியுள்ளேன்.
சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற 100 நாட்களில், முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அறிவுறுத்தலின்பேரில் தினமும் ஒவ்வொரு ஊருக்கும் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறேன்.
கம்பம் சட்டமன்ற தொகுதியில் இதுவரை அரசு கலைக்கல்லூரி இல்லாத நிலை இருந்து வந்தது. தற்போது முதல்முறையாக அரசு கலைக்கல்லூரி தொடங்குவதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது.
பொதுமக்களின் குறைகளை விரைவாக தீர்க்கும் வகையில், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு, அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் நேரில் வந்து மனுக்களை அளிப்பதுடன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தின் வாட்ஸ்அப் எண்ணிலும் தங்களது குறைகளை தெரிவிக்கலாம். அவற்றின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கம்பம் தொகுதியில் இதுவரை இல்லாத வகையில், மக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டறிந்து தீர்வு காணும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற முதலமைச்சர் விஜய், 100 நாட்களிலேயே எவராலும் செய்ய முடியாத சாதனையாக லஞ்சம்–லாவண்யத்தை கட்டுப்படுத்தியுள்ளார். இதன்மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் புதிய வரலாற்றை படைத்த முதலமைச்சராக விஜய் திகழ்கிறார்.
முதலமைச்சர் விஜயின் நல்லாட்சி உள்ளாட்சியிலும் தொடரும் வகையில், வருகிற உள்ளாட்சித் தேர்தலிலும் தமிழகத்தில் மகத்தான வெற்றியை பெறுவோம். எனவே, முதலமைச்சரின் நலத்திட்டங்களையும், அரசின் சாதனைகளையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் அனைவரும் அயராது பாடுபட வேண்டும்.
இவ்வாறு ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுப்பையா அய்யர், கம்பம் நகர பொறுப்பாளர் சுப்பிரமணி, கம்பம் பாலமீரா ரவிச்சந்திரன், பகவத் பிரகாஷ், அணைப்பட்டி தனசேகர பாண்டியன் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், ஊரக தமிழக வெற்றி கழக நிர்வாகிகள், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில் சுறா நன்றி கூறினார்.