புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்தவர் பேரானந்தம் என்பவரது மனைவி ராஜேஸ்வரி (33). காரைக்கால் அரசு பொது மருத்துவமனை மகப்பேறு பிரிவில் செவிலியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 4.30 மணியளவில் வார்டில் உள்ள மேஜை மீது தனது செல்போனை வைத்து விட்டு பணியில் ஈடுபட்டிருந்தார். மாலை 5.30 மணியளவில் திரும்பி வந்து பார்த்தபோது அவரது செல்போனை காணவில்லை. அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது யாரும் பார்க்கவில்லை என்று தெரிவித்தனர்.
அதையடுத்து மருத்துவமனையில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒருவர், மேஜை மீது வைத்துவிட்டுச் சென்ற செவிலியர் ராஜேஸ்வரியின் செல்போனை திருடிச் சென்றது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து செவிலியர் ராஜேஸ்வரி இதுகுறித்து காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் அறிவுசெல்வன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மற்றும் தொடர் முயற்சி செய்ததில் குற்றவாளி அடையாளம் காணப்பட்டார். அதைத் தொடர்ந்து கோயம்புத்தூர் காந்திபுரத்தை சேர்ந்த சங்கர் என்பவரது மகனான பேச்சியப்பனை (39) கைது செய்த போலீசார், அவரிடமிருந்து செல்போனை கைப்பற்றி காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
S. செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால். 9385856800