தாராபுரம், செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம்
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் சமத்தூர் பிரிவு அருகே விஷ்ணு லட்சுமி பி.எட். கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரியின் பின்புறம் வர்ஷினி நகர், கோல்டன் சிட்டி, வேலவன் நகர், வள்ளலார் நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட புறநகர் குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஷ்ணு லட்சுமி பி.எட். கல்லூரியின் பின்புறம் உள்ள தனியார் வீட்டுமனைக்குச் சொந்தமான காலி இடத்தில் நகராட்சி கழிவுநீர் கால்வாய் கழிவுகள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் மர்ம நபர்களால் லாரிகளில் கொண்டு வரப்பட்டு, லோடு லோடாகக் கொட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குடியிருப்புப் பகுதிக்கு அருகிலேயே மருத்துவக் கழிவுகள் மற்றும் கழிவுநீர் கால்வாய் கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் குடியிருப்புவாசிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, வயோதிகர்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு கழிவுகளிலிருந்து வீசும் துர்நாற்றம் காரணமாக சுவாசக் கோளாறு, வாந்தி, ஒவ்வாமை உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், சிலர் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
கழிவுகளை ஏற்றிக்கொண்டு கொட்டுவதற்காக வந்த லாரி ஒன்றை அப்பகுதியில் பணியாற்றி வந்த கட்டிடத் தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தி, ஓட்டுநர் மற்றும் உடனிருந்தவர்களிடம் கழிவுகளை குடியிருப்புப் பகுதியில் ஏன் கொட்டுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கழிவுகளை இப்பகுதியில் கொட்டுமாறு கூறி அனுப்பியதாகவும், அதன் அடிப்படையிலேயே இங்கு கழிவுகளைக் கொட்ட வந்ததாகவும் அவர்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவல் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில்தான் கழிவுகள் இங்கு கொண்டுவரப்பட்டனவா அல்லது கழிவுகளை அகற்றும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள தனிநபர்கள் தங்களது வசதிக்காக குடியிருப்புப் பகுதிகளில் சட்டவிரோதமாகக் கழிவுகளைக் கொட்டினார்களா என்பது குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருப்பது பொதுமக்களின் உடல்நலத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால், மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்தை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், அங்கு கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகள், கழிவுநீர் கால்வாய் கழிவுகள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளையும் பாதுகாப்பான முறையில் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி மருந்துகள் தெளித்து, சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குடியிருப்புப் பகுதியில் கழிவுகளை கொட்டியவர்கள் அரசு அதிகாரிகளாக இருந்தாலும், தனியார் ஒப்பந்ததாரர்களாக இருந்தாலும், அவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி சட்டரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி குடியிருப்புவாசிகளின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
மேலும், கழிவுகளை கொட்டுவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பது உண்மையா என்பது குறித்தும் அதிகாரிகள் வெளிப்படையான விசாரணை நடத்தி, பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.