சின்னமனூர்: தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுமுக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சின்னமனூர் நகர்மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், நகராட்சி பொறியாளர் சரவணக்குமார், நகராட்சி மேலாளர் முருகன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் வேல்முருகன், உத்தமபாளையம் வட்டாட்சியர் பாலசண்முகம் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் முன்னிலையில் தொழிற்சங்க பிரதிநிதிகள், ஒப்பந்த நிறுவன மேலாளர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தூய்மை பணியாளர்களின் PF, ESI உள்ளிட்ட நிலுவை கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பணப்பலன்களையும் ஒரு வார காலத்திற்குள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஒப்பந்த நிறுவனத்தினரிடையே சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்று வந்த போராட்டத்தை தூய்மை பணியாளர்கள் கைவிட்டு, வழக்கம்போல் தங்களது பணிகளில் ஈடுபட சம்மதித்து பணிக்கு திரும்பினர்.

பேச்சுவார்த்தையின் மூலம் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டதால், சின்னமனூர் நகராட்சியில் கடந்த ஐந்து நாட்களாக நீடித்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *