தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

ருத்ராவதி பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.1.40 கோடியில் 17 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணி தீவிரம்.

குண்டடம்,

திருப்பூர் மாவட்டம், ருத்ராவதி பேரூராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் 17 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ருத்ராவதி பேரூராட்சியில் குறைவான மழைப்பொழிவு காரணமாக ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த ஆழ்குழாய் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து தண்ணீர் வற்றியுள்ளது. மேலும், முத்தூர்–காங்கயம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிநீரும் போதுமானதாக இல்லாததால், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தற்காலிக நடவடிக்கையாக லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத் திட்டத்தின் கீழ், பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளிலும் 17 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தற்போது பல்வேறு இடங்களில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை பேரூராட்சி தலைவர் பா.கண்ணம்மாள், துணைத் தலைவர் பொ.மோகன்ராஜ் மற்றும் செயல் அலுவலர் பா.சதீஷ்குமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வழங்கும் வகையில், ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி, ஒரு வார காலத்திற்குள் பணிகளை முடிக்குமாறு ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *