தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம்:நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி 4 இடங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியல்
அமராவதி ஆற்றில் தினமும் 3,000 கன அடி தண்ணீர் திறக்க வலியுறுத்தல் – தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர், விவசாயிகள் பங்கேற்பு.
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், மூலனூர் மற்றும் கரூர் மாவட்டத்தின் கடைமடைப் பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் பாசனத்துக்காக அமராவதி ஆற்றில் நீதிமன்ற உத்தரவின்படி தண்ணீர் திறந்து விடக் கோரி, தாராபுரம்–கரூர் சாலையில் 4 இடங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
54 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள்
உடுமலைப்பேட்டை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவதன் மூலம் தாராபுரம் முதல் கரூர் மாவட்ட எல்லை வரையிலான சுமார் 54 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. மேலும், 147 கிராமங்களும், அவற்றைச் சார்ந்துள்ள 25 கூட்டுக் குடிநீர் திட்டங்களும் அமராவதி ஆற்று நீரை நம்பியுள்ளன.
இந்த நிலையில், அமராவதி ஆற்றில் நீர்வரத்து இருந்தபோதிலும், கடந்த 3 மாதங்களாக குடிநீர் தேவைக்காக போதிய அளவில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை என பொதுமக்கள், விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.
உயர் நீதிமன்ற உத்தரவு
இதுதொடர்பான வழக்கில், மதுரை உயர் நீதிமன்றம் அமராவதி அணையில் இருந்து திருப்பூர் மாவட்டம் தாராபுரம், மூலனூர் மற்றும் கரூர் மாவட்டத்தின் கடைமடைப் பகுதிகளில் குடிநீர் மற்றும் குறிப்பிட்ட பயிர்களுக்கான உயிர்த் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், குறிப்பிட்ட அளவில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
அதன்படி, முதல் இரண்டு நாள்களுக்கு தினமும் 3,000 கன அடி, அடுத்த இரண்டு நாள்களுக்கு 2,000 கன அடி, பின்னர் இரண்டு நாள்களுக்கு 1,000 கன அடி என படிப்படியாக 7 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவு என அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், நீதிமன்ற உத்தரவை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல், தினமும் 1,000 கன அடி தண்ணீர் மட்டுமே அமராவதி ஆற்றில் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், இதனால் கரூர் மாவட்ட கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேர்வது சாத்தியமற்றதாகிவிடும் என்றும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
எனவே, நீதிமன்ற உத்தரவின்படி முதல் கட்டமாக தினமும் 3,000 கன அடி தண்ணீரைத் திறந்து விட வேண்டும். தொடர்ந்து 2,000 கன அடி, 1,000 கன அடி என 7 நாள்களுக்கு தண்ணீர் திறந்து விடுவதுடன், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் தண்ணீரையும் அமராவதி ஆற்றில் திறந்து விட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
4 இடங்களில் மறியல்
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தாராபுரம்–கரூர் சாலை மற்றும் வெள்ளக்கோவில்–மூலனூர்–தாராபுரம் சாலையில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
தாராபுரம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் துரைசாமி, முன்னாள் அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தி.மு.க. மாவட்டச் செயலாளர் இல. பத்மநாபன் ஆகியோர் தலைமையில் ஆத்துக்கால்புதூர் மற்றும் புதுப்பை பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது.
மூலனூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வகுமாரன் ஆகியோர் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.
மூலனூர் பேரூர் கழகச் திமுக செயலாளர் மக்கள் தண்டபாணி, லக்கனநாயக்கன்பட்டி முன்னாள் ஊராட்சித் தலைவர் பழனிச்சாமி, செல்வகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளப்பட்டி பிரிவு உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சியினரும் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்குரைஞர் சிவகுமார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த காமராஜ், பங்க் மகேஷ்குமார், பேரூர் கழகச் செயலாளர் வெற்றிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கால்நடைகளுடன் திரண்ட மக்கள்
பள்ளப்பட்டி பிரிவு, ஒத்த மாந்துறை, புதுப்பை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது கால்நடைகளுடன் திரண்டு வந்து சாலையில் அமர்ந்தனர். இதனால் தாராபுரம்–கரூர் சாலையிலும், வெள்ளக்கோவில்–மூலனூர்–தாராபுரம் சந்திப்பு சாலையிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்தின்போது, “நீதிமன்ற உத்தரவை அரசு மதிக்க வேண்டும்; அமராவதி ஆற்றில் போதிய அளவு தண்ணீர் திறந்து விட வேண்டும்; திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட கடைமடைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போலீசாருடன் வாக்குவாதம்
சாலை மறியல் போராட்டத்துக்கு மூலனூர் போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். தாராபுரம் டி.எஸ்.பி. சிவகுமார் தலைமையில், மூலனூர் காவல் ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை மற்றும் 60-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் நடத்தக் கூடாது என்றும், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், “எங்களுக்கு குடிநீர்தான் வேண்டும்; அனைவரையும் கைது செய்யுங்கள்” என்று கூறி மீண்டும் சாலையில் அமர்ந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இதற்கிடையே, மாவட்டத்தின் எல்லைப் பகுதியான ஒத்தமாந்துறையை அடுத்த அமராவதி ஆற்றுப் பாலத்தை கடந்து கரூர் மாவட்ட எல்லைக்குள் உள்ள சின்னதாராபுரம் பகுதியிலும் பொதுமக்கள் சார்பில் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சின்னதாராபுரம் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
1,500 கன அடி தண்ணீர் திறக்க அரசு உறுதி
போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போலீசாரும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் அரசு உயர் அதிகாரிகளுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், அமராவதி அணையில் இருந்து 7 நாள்களுக்கு தினமும் 1,500 கன அடி தண்ணீர் திறந்து விட அரசு முடிவு செய்துள்ளதாகவும், வியாழக்கிழமை முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் போராட்டக்காரர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
மீண்டும் முற்றுகைப் போராட்டம்
அரசு அளித்துள்ள உத்தரவாதத்தின்படி வியாழக்கிழமை அமராவதி அணையில் இருந்து கரூர் மாவட்ட எல்லை மற்றும் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையும் வகையில் தண்ணீர் திறந்து விடப்படாவிட்டால், அடுத்த கட்டமாக தாராபுரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களைத் திரட்டி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பது தொடர்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தால் தாராபுரம், மூலனூர், புதுப்பை, வெள்ளகோவில், பள்ளப்பட்டி பிரிவு மற்றும் கரூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதிகளில் பரபரப்பு நிலவியது.