புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் அருண் அய்யாவு செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீட்டில் வளர்க்கப்படும் அனைத்து நாய்களுக்கும் உரிமம் பெற வேண்டும் என்று கடந்த ஜூலை 17ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்தும் விதமாக மேட்டுப்பாளையம் கால்நடை மருத்துவமனையில் புதன் கிழமைகளில் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.
வளர்ப்பு நாய்களுக்கான புதிய உரிமம் பெறுவதற்கு ரூ. 200ம், உரிமம் புதுப்பித்தலுக்கு ரூ.150ம் வசூலிக்கப்படுகிறது. வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில், உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொகுதி வாரியாக சிறப்பு உரிமம் வழங்கும் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் செப்.5ம் தேதி உழவர்கரை நகராட்சி சமூக நலக்கூடத்தில் நாய்களுக்கான உரிமம் வழங்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டுகிறது. முகாமில் பொதுமக்கள் தங்களது வளர்ப்பு நாய்களுக்கு புதிய உரிமம் பெறுதல் / புதுப்பித்தல் பணிகளை மேற்கொள்ளலாம். இதற்கு உரிமையாளரின் ஆதார், வளர்ப்பு நாய்க்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி சான்று, நாயின் புகைப்படம், உரிமையாளரின் புகைப்படம் ஆகிய ஆவணங்களை தவறாமல் கொண்டு வர வேண்டும்.
மேலும், வரும் வாரங்களில் உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பிற தொகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அதற்கான தேதி, இடம் மற்றும் சம்பந்தப்பட்ட தொகுதி குறித்த விவரங்கள் நகராட்சியால் முன்கூட்டியே அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
S.செய்யது தாஜுல் உசேன்
செய்தியாளர்
9385856800